search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் மீனவர்கள்"

    • தடைகாலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தடை காலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் குடும்ப சூழ்நிலை கருதி வேறு வேலைகளுக்கும் சென்றனர்.

    இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என பாம்பன் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே மீன் பிடிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதன் காரணமாக தடைகாலம் முடிந்த நிலையிலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் ராமேசுவரம் மீனவர்களுக்கு இன்று வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் கடல் காற்று குறைந்து 17-ந்தேதி இயல்புநிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×